Thursday, April 14, 2011

தமிழுக்கு அமுதென்று பேர்...

தமிழர் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவுகள் செய்ய ஆரம்பித்து சில நாட்களே அகியுள்ளமையால் என்ன எழுதுவதென்று யோசனையில் உள்ளேன். இந்நாளில் தமிழில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளமையால் இதோ இந்த சிறிய முயற்சி. தமிழில் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பள்ளி நாட்களில் எழுதியது, படித்தது. எழுத்து பிழைகளின்றி எழுதும் சில மாணவிகளில் நானும் ஒருத்தி என்பதினால் எழுத தயங்குகிறேன். நக்கீரர் பரம்பரையோ என சிலர் கேலி செய்யும் அளவிற்கு இருந்த நான் இப்படி ஆனதுக்கு மிக முக்கிய காரணம் பள்ளிப்பருவம் முடிந்ததும் தமிழ் புத்தகங்களை படிக்காததுதான். வல்லினமா, இடையினமா என்ற வினா ஒவ்வொரு வாக்கியத்திலும் எழுகிறது. சந்திப்பிழைகள் உள்ளனவா என்ற அச்சம் உள்ளது. எதையோ பதிவு செய்ய தொடங்கி என் தயக்கத்தையும், அச்சத்தையும் பதிவு செய்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல பாடம். "சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பதுப்போல காலம் சிலவற்றை நாம் மறக்க காரணமாக இருக்கலாம். எனினும் அதை மறக்காமல் இருக்க நாம் முயற்சித்ததாக வேண்டும் என்ற ஒரு உணர்வை தந்துள்ளது. இது எனக்கு ஆரம்பமே..இனி தொடர்ந்து தமிழில் பதிவு செய்யப் போகிறேன் என்ற உறுதியுடன் என் பயணத்தை இன்று இங்கு முடிக்கிறேன்....மீண்டும் தொடரும்...

No comments:

Post a Comment